Press "Enter" to skip to content

சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முதல் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும், அரசு பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது, திரையரங்கம்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

வரும் 13-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதால் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி இரவு 10 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் லீக் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைக் கட்டுப்படுத்த 11-ம் தேதி (இன்று) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது. வழிபாட்டு தலங்கள் அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி இரவு 10 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்க அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டு தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

புதிய திரைப்படங்கள் முதல் 7 நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதிக்கப்படுகிறது. அனைத்துக் காட்சிகளின் போதும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »