Press "Enter" to skip to content

தமிழகத்தில் 61 நாள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது

மீன்கள் இனப்பெருக்கத்துக்காக தமிழகத்தில் 61 நாட்கள் அடங்கிய மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது. இதனால் மீன்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை:

இந்தியாவில் கடல்வளம், மீன்வளத்தைப் பாதுகாப்பதற்காக ஆண்டுதோறும் கிழக்கு, மேற்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடி தடைகாலத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த காலகட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கம் நடக்கும். கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஓடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. வருகிற ஜூன் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை 61 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

மீன்பிடி தடைகாலத்தையொட்டி, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14-ந் தேதிக்குள் (நேற்று) கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிவிட்டனர். இதனால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளும், பைபர் படகுகளும் கரையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

கடல் காற்றின் நிலை காரணமாக சில மீனவர்கள் கரை திரும்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் மட்டும் மீன்பிடி தடைகாலத்தில் கடலுக்குள் செல்ல அனுமதி இல்லை. என்ஜின் பொருத்தப்படாத பாரம்பரிய படகுகள் மூலம் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன்பிடிக்கத் தடை இல்லை.

மீன்பிடி தடைகாலம் காரணமாக கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும், இதனால் மீன் வகைகள் விலை வரும் நாட்களில் கணிசமாக உயரும் என்றும் அகில இந்திய மீனவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சவுந்தர் தெரிவித்துள்ளார். கடல் மீன்கள் வரத்துக் குறைவால் ஏரி மீன்களுக்கு மவுசு காணப்படுகிறது.

மீன்பிடி தடைகாலம் குறித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் வியாபாரி சதீஷ் கூறியதாவது:-

மீன்பிடி தடைகாலம் தொடங்குவதற்கு முன்பே மீன்கள் வரத்து குறைவால் அவற்றின் விலை உயர்ந்துதான் இருக்கிறது. ரூ.600-க்கு விற்பனையான ஒரு கிலோ மாவ்லாஸ் மீன் ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. வஞ்சிரம் (பெரியது) ரூ.1,000, (சிறியது) ரூ.600-க்கும், சங்கரா (பெரியது) ரூ.300, (சிறியது) ரூ.250-க்கும், நெத்திலி ரூ.300-க்கும், வவ்வால் ரூ.650-க்கும், சீலா ரூ.400-க்கும், நண்டு ரூ.250-க்கும், இறால் ரூ.150 முதல் ரூ.300 வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஏரி வவ்வால் மீன் (பெரியது) ரூ.150, (சிறியது) ரூ.100-க்கும், கட்லா ரூ.110-க்கும், ஜிலேபி ரூ.80-க்கும் விற்கப்படுகின்றன. வரும் நாட்களில் மீன்கள் வரத்தைப் பொருத்து 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும் நாட்களில், சேதமடைந்த படகுகளைச் சீரமைப்பது, புதிய வலைகள் பின்னுவது போன்ற பணிகளில் மீனவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »