Press "Enter" to skip to content

வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் திடீர் மரணம்

தேர்தல் முடிவை அறியாமல் வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் மரணம் அடைந்தது அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி சின்னையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 61), சமூக ஆர்வலர். திருமணம் ஆகாத இவர், அந்த பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார்.

தமிழக சட்டசபைக்கு கடந்த 6-ந் தேதி நடந்த தேர்தலில், முதன் முறையாக மோகன், சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு வைரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அவர், தனது ஆதரவாளர்களுடன் வீரபாண்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து ஓட்டுப்பதிவு நாளான 6-ந் தேதி அன்று தாசநாயக்கன்பட்டி பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார். கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு மோகன், வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்றபோது அங்கு திடீரென வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மோகன் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி திடீரென இறந்தார்.

சுயேச்சை வேட்பாளர் மோகனுக்கு, 2 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். தேர்தல் முடிவை அறியாமல் அவர் மரணம் அடைந்தது அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சுயேச்சை வேட்பாளர் மோகன் இறந்த சம்பவம் குறித்து வீரபாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மல்லூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்தார். இதையொட்டி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்த போது, அந்த தொகுதிக்கு ஓட்டு எண்ணிக்கை வழக்கம் போல் நடைபெறும் என்றும், மரணம் அடைந்த வேட்பாளர் ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தார்.

இதே நடைமுறை வேட்பாளர் மோகன் மரணத்தை அடுத்து வீரபாண்டி தொகுதியிலும் கடைப்பிடிக்கப்படும் என்றும், திட்டமிட்டப்படி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »