Press "Enter" to skip to content

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார்- ஹரித்வார் ஸ்ரீ கருட ஆனந்தசுவாமிகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நோயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். அவருக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஹரித்வார் ஸ்ரீ கருட ஆனந்தசுவாமிகள் தெரிவித்துள்ளனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ காயநிர்மலேஸ்வரர் ஆலயத்திற்கு ஹரித்வார் ஸ்ரீ கருட ஆனந்தசுவாமிகள் சுவாமி பார்வை செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். ஹரித்வார் கும்பமேளாவை முடித்துவிட்டு நான் இப்பொழுது இந்த கோவிலுக்கு வந்துள்ளேன். இந்த தேர்தலில் மக்கள் கணக்கும் ஆன்மீகக் கணக்கும் ஒன்றாக இருக்கப் போகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் என பலர் கூறிவந்தனர். அப்போதே நான் ஆட்சி எப்பொழுதும் கவிழாது 5 ஆண்டுகள் நல்லாட்சி புரிவார் எனக் கூறினேன். தற்பொழுது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் 124 முதல் 154 சட்டமன்ற தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்.

தனிப் பெரும்பான்மையாக 124 முதல் 134 சீட்டை பெற்று மீண்டும் ஆட்சியில் முதல்வராக அமர்வார். ஒரு நல்ல அரசன் நல்லாட்சி புரிந்தால் நல்ல மழை பெய்யும், விவசாயம் செழிப்புடன் காணப்படும். அது போல தான் தற்பொழுது நல்லாட்சி நடைபெற்று வருகிறது. நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் தொழில் வளர்ச்சி பெற்று வருகின்றனர்.

இந்த பகுதியில் ஓடும் வசிஷ்ட நதியை மேம்படுத்தி சிறப்பு விழா எடுக்க நான் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். இந்த நதியை சார்ந்து உள்ள சிவாலயங்களில் அனைத்திலும் குடமுழுக்கு நடத்தி சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

கொரோனா நோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதனை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அது போல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நோயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். அவருக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »