Press "Enter" to skip to content

வெளிநாட்டு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டு அனுமதி பற்றி 3 நாளில் முடிவு – மத்திய அரசு அதிரடி

வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகிற தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கோரும் விண்ணப்பம் மீது 3 நாளில் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவு போட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் 2-வது அலை மின்னல் போல வேகம் எடுத்து பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்நாட்டில் தயாரிக்கப்படுகிற கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி ஆகிய 3 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. முதல் 2 தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தொற்று பரவல் அதிவேகம் எடுத்துள்ளதால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசு விரும்புகிறது. உள்நாட்டு தடுப்பூசிகளுடன் வெளிநாட்டு தடுப்பூசிகளையும் களம் இறக்க விரும்புகிறது.

அதற்கு ஏற்ற வகையில், வெளிநாட்டில் தயாரிக்கப்படுகிற தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டு அனுமதியை, உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகளைப்போலவே விரைவாக வழங்க மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமையன்று முடிவு எடுத்து அறிவித்தது.

இந்த நிலையில் அது குறித்த வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன் மிக முக்கிய அம்சம், வெளிநாட்டு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டு அனுமதிக்காக விண்ணப்பம் அளிக்கப்படுகிறபோது, விண்ணப்பம் அளித்த நாளில் இருந்து 3 பணிநாட்களில் முடிவு எடுத்து விட வேண்டும் என்பதாகும்.அந்த வகையில் பதிவு சான்றிதழ், இறக்குமதி உரிமம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் மீது இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் தலைமையிலான மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு 3 பணி நாட்களில் முடிவு எடுக்க வேண்டும்.

வெளிநாட்டு தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமோ, அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியோ சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 3 நாளில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டு விடும்.

இத்தகைய வெளிநாட்டு தடுப்பூசிகளை முதலில் 100 பேருக்கு செலுத்தி அவர்களை 7 நாட்களுக்கு கண்காணித்து அதன் பாதுகாப்பு அம்சத்தை ஆராய வேண்டும். அந்த பாதுகாப்பு அறிக்கையை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்புக்கு அளிக்க வேண்டும். அந்த அறிக்கை ஆராயப்படும். அதில் திருப்தி ஏற்பட்ட உடன் விண்ணப்பதாரர் தடுப்பூசியை பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்படும். மேலும் விண்ணப்பம் கிடைத்த 7 நாளில் நிபுணர் குழுவுடன் கலந்தாலோசனை நடத்தி சோதனைக்கான நெறிமுறைகளை அங்கீகரிக்கும். அதன்படி சோதனைகளை நடத்தி தரவுகளை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் அளிக்க வேண்டும். அதை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் ஆராய்ந்து அவசர கால பயன்பாட்டு அனுமதியை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »