Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பு பணிக்கு தேர்தல் நடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக உள்ளன- அமைச்சர் விஜயபாஸ்கர் புகார்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் தீவிரமாகி வருவது குறித்தும் அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கேட்கப்பட்டது.

சென்னை:

கொரோனா 2-வது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிக்கிறது. தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி விட்டது. கொரோனா உயிர் இழப்பும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை போர்க்கால நடவடிக்கையில் இறங்கி உள்ளது. தடுப்பூசியை அதிகப்படுத்தும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து வருகின்ற நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருப்பதால் அனைவரும் முகக்கவசம், அணிந்து வெளியே செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மதம்சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்கள், திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கூடுவதை தவிர்க்கவும், அத்தகைய நிகழ்ச்சிகளை காவல்துறையும், சுகாதாரத்துறையும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் தீவிரமாகி வருவது குறித்தும் அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது. ஆனாலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாகி வருகிறது. 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் சுகாதாரத்துறைக்கு தேவையான ஆலோசனை, அறிவுரைகளை அமைச்சர் அருகில் இருந்து வழங்கும் போது இந்த பணிகள் இன்னும் வேகமாக நடைபெறும். உற்சாகமாக செயல்படுவார்கள்.

ஆனால் தேர்தல் ஆணையம் கொரோனா தொடர்பாக அமைச்சர் கூட்டம் மட்டும் நடத்தலாம் என்று கூறுகிறது. களத்தில் இறங்கி பணி செய்ய வேண்டிய இந்த நேரத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக உள்ளது.

தேர்தல் விதிமுறையால் கைகள் கட்டப்பட்டு உள்ளன. முழுமையாக செயல்பட முடியவில்லை. தொற்று வேகமாக பரவுகின்ற காலகட்டத்தில் மருத்துவர்கள், நர்சுகளின் பங்கு முக்கியமானது. அவர்களை சந்தித்து ஊக்கப்படுத்துவது அவசியமாகும்.

அதுபோன்ற செயல்களில் ஈடுபட முடியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மக்கள் பதட்டத்துடன் இருக்கக் கூடிய இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலையும், தைரியத்தையும் தரவேண்டும்.

இது போன்ற நேரத்தில் கொள்கை முடிவு எடுக்க தேவை இல்லை. சுகாதார பணியாளர்களோடும் மக்களோடும் இணைந்து அமைச்சர் செயல்பட வேண்டும். ஆனால் தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி பணிகள் நடைபெறாமல் இருப்பது ஏற்புடையது அல்ல.

இது போன்ற நெருக்கடியான காலத்தில் மக்களின் அச்சத்தை போக்குவது, பயத்தை நீக்குவது சுகாதாரத்துறையின் கடமையாகும். அதனை செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு உள்ளது. இன்னும் 2 வாரத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் வலுவான சுகாதார கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம். அதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும். களத்தில் இறங்கி பணியாற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

கோப்புப்படம்

எனவே 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா சிகிச்சைக்கான ‘ரெம்டிசிவர்’ மருந்தினை கூடுதலாக வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதார மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »