Press "Enter" to skip to content

எனக்கு வயதாகி விட்டதாக உணர்கிறேன் – டோனி

சென்னை அணிக்காக 200 ஆட்டங்களில் ஆடியது, தனக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்த்துவதாக டோனி கூறியுள்ளார்.

மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப், தீபக் சாஹரின் அபார பந்துவீச்சுக்கு (4 மட்டையிலக்கு) ஈடுகொடுக்க முடியாமல் 106 ஓட்டங்களில் சுருண்டது. இந்த எளிய இலக்கை சென்னை அணி 15.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி ஆடிய 200-வது ஆட்டம் இதுவாகும். அதாவது ஐ.பி.எல்.-ல் 176 ஆட்டம், சாம்பியன்ஸ் லீக்கில் 24 ஆட்டம் என்று மொத்தம் 200 ஆட்டங்களில் சென்னை அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த மைல்கல் குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று 39 வயதான டோனியிடம் கேட்ட போது, ‘மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன்’ என்று நகைச்சுவையாக பதில் அளித்தார். மேலும் டோனி, ‘இது ஒரு நீண்ட பயணம். வித்தியாசமான சூழல், வெவ்வேறு நாடுகள் என்று மிகவும் சுவாரஸ்யமான ஒரு பயணம். கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து எனது ஐ.பி.எல். பயணம் தொடங்கியது. அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா, துபாயில் எல்லாம் விளையாடி விட்டு மீண்டும் தற்போது சொந்த நாட்டில் விளையாடுகிறேன். ஆனால் எங்களுக்கு மும்பை, சொந்த ஊர் மைதானமாக அமையும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை.

சென்னை சேப்பாக்கத்தை எடுத்துக் கொண்டால் 2011-ம் ஆண்டு வரை எங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆடுகளமாக அது இருந்தது. அப்போது சுழலுக்கு ஒத்துழைக்கும். வேகப்பந்து வீச்சுக்கும் உதவிகரமாக இருக்கும். ஆனால் ஆடுகளத்தை மறுசீரமைப்பு செய்த பிறகு அதன் தன்மை மாறி விட்டது. அதன் பிறகு அங்குள்ள சூழலுக்கு தக்கபடி மாற்றிக்கொள்வது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

அதே சமயம் தற்போதைய மும்பை வான்கடே ஆடுகளத்தை எடுத்துக் கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் எல்லாமே போட்டிக்குரிய தினத்தில் சீதோஷ்ண நிலையை பொறுத்தது. இன்றைய ஆட்டத்தின் போது ஆடுகளத்தில் பந்தின் நகர்வு தன்மை நன்றாக இருந்தது. ஆனால் அதிக அளவில் ‘ஸ்விங்’ ஆகவில்லை. பனிப்பொழிவு இல்லாததால் பந்து வீச்சு எடுபட்டது’ என்றார்.

சென்னை அணிக்காக 200 ஆட்டங்களில் ஆடியுள்ள முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள கேப்டன் டோனிக்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறுகையில், ‘டோனியின் நீண்ட பயணத்தை பாராட்டியாக வேண்டும். 200 ஆட்டங்களில் ஆடியுள்ள போதிலும், இன்னும் போட்டியிலும், அணிக்காகவும் தனது சிறப்பான பங்களிப்பை அளிப்பதில் ஆர்வமுடன் உள்ளார். சென்னை அணி வளர்ந்து நிற்கிறது. அதோடு சேர்ந்து டோனியும் வளர்ந்துள்ளார். அவருக்கும் அணிக்கும் இடையிலான உறவு அருமையானது. கன கச்சிதமானது. சென்னை சூப்பர் கிங்சின் இதயதுடிப்பாக டோனி இருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »