Press "Enter" to skip to content

மே 2-ந்தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி உறுதி

கொரோனா பாதிப்பு காரணமாக, வாக்கு எண்ணிக்கையை எப்படி சுமுகமாக நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துடனும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

சென்னை :

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வாக்கு எண்ணிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மே 2-ந் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கொரோனா பாதிப்பு காரணமாக, வாக்கு எண்ணிக்கையை எப்படி சுமுகமாக நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துடனும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் விசாலமான பரப்பளவை கொண்டவையாகவே உள்ளன. இதனால் வாக்கு எண்ணும் பணிக்காக 14 மேஜைகள் வரை போட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

வாக்குச்சாவடி அதிகம் உள்ள தொகுதிகளை கருத்தில் கொண்டு கூடுதலாக மேஜைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க 6 அடி இடைவெளி அவசியம். 6 அடி இடைவெளியில் ஒவ்வொரு மேஜையையும் அமைப்பது சிக்கலாக இருக்கும்.

எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலைமையை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் வாக்கு எண்ணிக்கை மேஜைகளை அமைக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மருத்துவ குழுவுடன் ஆலோசித்து வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை இறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின்போது, வேட்பாளர்கள் மற்றும் ஒவ்வொரு மேஜையிலும் உள்ள அவர்களது முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியமா?, எத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணும் பணியின் போதோ, அதற்கு முன்போ கொரோனா நோய்த்தொற்றால் அதிகாரிகள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அது வாக்கு எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, கூடுதல் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சில தொகுதிகளில் 67 வேட்பாளர்கள் வரை களத்தில் உள்ளனர். அந்த தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்காக பிரத்யேக ஏற்பாடுகளை எப்படி மேற்கொள்வது? என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து தினமும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்.

அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே வாக்கு எண்ணிக்கைக்கு மேஜைகள் உள்பட அனைத்தும் இறுதி செய்யப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையத்தின் சூழல், கொரோனா பாதிப்பு நிலவரம் போன்றவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கே நன்கு தெரியும் என்பதால், அவர்களின் கருத்துகள் கோரப்படுகின்றன. அந்த கருத்துகளின் அடிப்படையிலேயே வாக்கு எண்ணும் பணிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

வாக்கு எண்ணும் பணிகள் சுமுகமாக நடைபெற வேண்டும். அதேவேளையில், வாக்கு எண்ணிக்கையால் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது என்பதில் தமிழக தேர்தல் ஆணையம் கவனமாக உள்ளது. இதை மனதில் கொண்டே வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளன. அவற்றை எதுவும் செய்ய முடியாது. கன்டெய்னர்கள் உள்ளே நுழைந்ததாகவும், மர்ம நபர்கள் சென்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் முன்வைத்தன.

எந்தெந்த இடங்களில் இருந்து புகார் வந்ததோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டன. இதன்படி, எந்த இடத்திலும் முறைகேடான சம்பவங்கள் நடக்கவில்லை.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் தமிழக காவல் துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்காக நடமாடும் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நடமாடும் கழிப்பறை வசதி கொண்ட வாகனங்களை மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்குள் நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கட்டிடங்களில் ரகசியமாக கன்டெய்னர் உள்ளிட்ட வாகனங்களோ, நபர்களோ நுழையவில்லை. எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »