Press "Enter" to skip to content

இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் நியமனம் : அமெரிக்காவில் சரித்திரம் படைத்தார், இந்திய பெண்

வனிதா குப்தா நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்கியது. இவருக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், எதிராக 49 ஓட்டுகளும் விழுந்தன.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் அமர்த்தப்பட்டு இந்திய வம்சாவளிப்பெண் வனிதா குப்தா சரித்திரம் படைத்தார்.

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில், இணை அட்டார்னி ஜெனரல் பதவிக்கு இந்திய வம்சாவளிப்பெண்ணான வனிதா குப்தா (வயது 46) நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நீதித்துறையில் இது மூன்றாவது பெரிய பதவி ஆகும்.

இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளிப்பெண் இவர்தான். அந்த வகையில் அவர் புதிய சரித்திரம் படைத்து இருக்கிறார்.

இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்கியது. இவருக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், எதிராக 49 ஓட்டுகளும் விழுந்தன.

செனட் சபையில் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தலா 50 இடங்களை கொண்டுள்ளன. ஓட்டெடுப்பில் தலா 50 ஓட்டு விழுந்து விட்டால், துணை ஜனாதிபதி தனது ஓட்டை பதிவு செய்து முடிவுக்கு உதவுவார். அந்த வகையில் வனிதா குப்தா நியமன ஒப்புதலுக்கு 50, எதிராக 50 வாக்குகள் விழுந்து விட்டால், முடிவு காண்பதற்காக தனது ஓட்டை போடுவதற்காக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சபையில் இருந்தார். ஆனால் குடியரசு கட்சி எம்.பி. லிசா முர்கோவ்ஸ்கி தனது ஓட்டை வனிதா குப்தாவுக்கு ஆதரவாக போட்டார். இதனால் அவர் 51 வாக்குகளை பெற்று விட்டதால், கமலா ஹாரிஸ் வாக்கு அளிக்கும் அவசியம் எழவில்லை.

வனிதா குப்தாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய பெற்றோர் ராஜீவ் குப்தா, கமலா வர்ஷினி தம்பதியின் மகளாக பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியாவில் பிறந்து வளர்ந்து, யேல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டமும் பெற்றவர் இவர். அங்கு கொலம்பியா மாவட்டத்தின் சட்ட உதவி சங்கத்தின் சட்ட இயக்குனரான சின் கே. லேயை மணந்துள்ளார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மனித உரிமைகளுக்காக போராடி பிரபலமான வக்கீல் வனிதா குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »