Press "Enter" to skip to content

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது -உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு

மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என அரசு சொல்லக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

புதுடெல்லி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள உற்பத்திக்கூடத்தில் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாக வழங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்கும்படி தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்திலும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட்டை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பியிருப்பதாகவும், அதனால் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள வேறு ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என தமிழக அரசு கூறியது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்த தயாரா? தமிழக அரசு எடுத்து நடத்தினாலும் கவலையில்லை என தலைமை நீதிபதி யோசனை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், ஆலையை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும், ஆலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறினார்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என அரசு சொல்வதா? என கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆலயை திறக்க முடியாது என சொல்லக்கூடாது என்றார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »