Press "Enter" to skip to content

புதுச்சேரியில் இன்றும், நாளையும் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் இன்று, நாளை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

உலகம் முழுவதும் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில் புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதற்கட்டமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதாவது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டது. ஓட்டல்கள், கடைகள் திறக்கவும், வாகனங்கள் இயக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை. புதுவை நகரின் பிரதான சாலைகளில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள் இரவு 11 மணி வரை திறந்தே இருந்தன. அதேபோல் நகரில் நள்ளிரவு வரை வாகனங்கள் வழக்கம்போல் வலம் வந்தன. பொதுமக்களும் சாலைகளில் சுற்றித்திரிந்தனர். போலீசாரின் கெடுபிடி குறைந்ததால் இந்த ஊரடங்கு பிசுபிசுத்தது. இதனால் அரசு அறிவித்த ஊரடங்கு கேள்விக்குறியானது.

இதற்கிடையே தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்தனர். மேலும் மதுபிரியர்களும் தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

புதுவை மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதை மக்கள் உணர்ந்து வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து நாம் தப்பிக்க அரசு அறிவித்துள்ள தளர்வுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »