Press "Enter" to skip to content

ஆக்சிஜன் மீதான சுங்க வரி ரத்து – மோடி தலைமையிலான கூட்டத்தில் முடிவு

ஆக்சிஜன் மீதான சுங்க வரியை 3 மாத காலத்துக்கு ரத்து செய்து, பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தடுப்பூசி இறக்குமதிக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

ஆக்சிஜன் மீதான சுங்க வரியை 3 மாத காலத்துக்கு ரத்து செய்து, பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தடுப்பூசி இறக்குமதிக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றின் இரண்டாவது அலையை வீழ்த்துவதற்காக நாடு உறுதியுடன் போராடி வருகிறது.

அதே நேரத்தில் தொற்று பரவல், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதும், நோயாளிகளால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதும், அவர்களுக்கான சிகிச்சையில் முக்கிய பங்களிக்கும் ஆக்சிஜனுக்கு (பிராண வாயு) தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும் கவலையை அளிப்பதாக அமைந்துள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி பிற நோயாளிகளும் உயிரிழந்து வருவது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இடையே ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கும், தேவையுள்ள இடங்களில் துரிதமாக வினியோகம் செய்வதற்கும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முழுத்திறனையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கவும் உற்பத்தியாளர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு, வினியோகம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி டெல்லியில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், சுகாதார மந்திரி மருத்துவர் ஹர்சவர்தன், எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வீடுகளிலும், ஆஸ்பத்திரிகளிலும் உள்ள நோயாளிகளின் பராமரிப்புக்காக மருத்துவ ஆக்சிஜனை வழங்குவதுடன், மருத்துவ உபகரணங்களையும் உடனடியாக அதிரிக்க வேண்டிய உடனடி தேவை எழுந்துள்ளதாக மோடி வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் அனைத்து அமைச்சகங்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு அவர் வலியுறுத்தினார்.

அப்போது அவரிடம் கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிற ரெம்டெசிவிர் மற்றும் அதன் மூலப்பொருளுக்கும் சமீபத்தில் சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

நோயாளிகளுக்கான ஆக்சிஜனை வழங்குவது தொடர்பான அனைத்து உபகரணங்களையும் இறக்குமதி செய்வதை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆக்சிஜன் மீதான சுங்க வரியையும், சுகாதார கூடுதல் வரியையும் (செஸ்) 3 மாத காலத்துக்கு ரத்து செய்வது என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி மருத்துவ ஆக்சிஜன் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டருடன் கூடிய புளோமீட்டர், ரெகுலேட்டர், கனெக்டர், ஆக்சிஜன் கேனிஸ்டர், சேமிப்பு டேங்குகள், சிலிண்டர்கள், கிரையோஜெனிக் சிலிண்டர்கள் உள்ளிட்ட 16 உபகரணங்கள், சாதனங்கள் மீது 3 மாத காலத்துக்கு சுங்க வரி விதிக்கப்பட மாட்டாது.

நாசி கானுலாவுடன் கூடிய வென்டிலேட்டர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களுக்கும் இந்த வரி விலக்கு பொருந்தும்.

கொரோனா தடுப்பூசி இறக்குமதி மீதும் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் வர உள்ள நிலையில் இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விலக்குகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இது ஆக்சிஜன் மற்றும் அதனுடன் தொடர்புடைய கருவிகள் மற்றும் சாதனங்களின் விலை குறைய உதவும். வெளிநாட்டு தடுப்பூசிகளின் விலையும் குறையும். இவையெல்லாம் இறக்குமதி செய்து வந்து சேருகிறபோது, தடையற்ற மற்றும் விரைவான அனுமதியை வழங்குமாறு வருவாய்த்துறையினரை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »