Press "Enter" to skip to content

ரஷிய தடுப்பூசி எப்போது இந்தியா வரும்? – இந்திய நிறுவனம் பதில்

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரஷியா உருவாக்கியது.

ஐதராபாத்:

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரஷியா உருவாக்கியது.

அங்குள்ள கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் தயாரித்து வழங்குகிறது.

இந்தியாவில் இந்த தடுப்பூசியை மருத்துவ பரிசோதனை செய்து வினியோகிக்கும் உரிமையை ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பரில் கையெழுத்தானது.

இந்த தடுப்பூசியின் 10 கோடி டோஸ்களை வினியோகிக்க இந்த ஒப்பந்தம் வழிவகுத்தது. பின்னர் இது 12.5 கோடி டோஸ்களாக அதிகரிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டு அனுமதியை இந்தியா சமீபத்தில் அளித்தது.

இந்த தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுபற்றி மருத்துவர் ரெட்டிஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பதிலில், “இந்த தடுப்பூசியின் முதல் தொகுப்பை (நிதி ஆண்டின்) முதல் காலாண்டில் பெறுவதுதான் எங்கள் இலக்கு. மே இறுதிக்குள் அவற்றைப் பெறுவதற்கு முடிந்த வரை முயற்சி செய்கிறோம்” என கூறி உள்ளார்.

ரஷியாவில் இருந்து இந்த தடுப்பூசியானது ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்திடம் இருந்து உறை நிலையில் (அதாவது மைனஸ் 18 முதல் மைனஸ் 22 வெப்ப நிலையில்) இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபற்றி ஏற்கனவே ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரீவ் கூறுகையில், “இந்த கோடை காலத்திற்குள் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 5 கோடி டோஸ் தயாரிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டார்.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக இந்தியாவில் 5 மருந்து நிறுவனங்களுடன் ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கிறது.

இந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 3-வது தடுப்பூசி என்ற பெயரைப்பெறும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »