Press "Enter" to skip to content

எந்த தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போடுங்கள்- கமல்ஹாசன்

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வரும் பொறுப்பை வீட்டில் இருக்கும் இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்தத் தீநுண்மத்தால் கடந்த ஆண்டிலிருந்தே நமது வாழ்வு எதிர்பாராத வகையில் மாறிப் போய்விட்டது.

நோய்க் கிருமியிடம் இருந்து தப்பித்து வாழ்வதற்கான வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எந்தத் தயக்கமும் அச்சமும் காட்டாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். சுற்றத்தாரை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துங்கள். நான் இரண்டு தவணைகளை முடித்து விட்டேன். எனக்கு அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

பொதுவெளி நடமாட்டத்தை முடிந்த மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள்.

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வரும் பொறுப்பை வீட்டில் இருக்கும் இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தவிர்க்க முடியாமல், வெளியில் செல்ல நேர்ந்தால் தரமான முக கவசம் தவறாது அணிய வேண்டும். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முடிந்தவரை கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது ஆகியவற்றை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

எப்போது வெளியே சென்று வந்தாலும் உடனடியாகக் குளித்து ஆடைகளை மாற்றிக்கொள்வது அவசியம்.

இரண்டாவது அலை குழந்தைகளையும் அதிக அளவில் பாதிக்கிறது. வீட்டில் குழந்தைகள், முதியோர் இருந்தால், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள். வதந்திகளை நம்பாதீர், பரப்பாதீர்.

மனநிலையை ஆரோக்கியமாக பாசிட்டிவாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதற்கு நல்ல புத்தகங்களை வாசிப்பது, இசை கேட்பது, நண்பர்களோடு தொலைபேசியில் அல்லது இணையத்தில் உரையாடுவது போன்றவை உதவக்கூடும்.

அரசுகளால் ஓர் எல்லைக்கு மேல் நம்மைக் காக்க முடியாது என்பதே இன்றைய புள்ளிவிபரங்கள் காட்டும் நிதர்சனம். மருத்துவக் கட்டமைப்பிற்கு மேலும் மேலும் சுமையை கூட்டக்கூடாது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கு, “உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை; உதிரத்தில் உண்டே உதவும் குணம்” என்று உங்களைப் பற்றி நான் பெருமையாகக் குறிப்பிடுவதுண்டு. ஊரே முடங்கிக் கிடந்தபோது “நாமே தீர்வு” என முதன்முதலில் களத்தில் இறங்கியவர்கள் நாம். நமது நற்பணிகளை தொய்வில்லாமல் தொடர்வோம்.

அருகிலிருக்கும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்புகளுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறதென்பதை விசாரித்து உடனுக்குடன் உதவுங்கள். கொரோனா பெருந்தொற்று குறித்தும், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காக்க யார் என்ன முயற்சி செய்தாலும் எந்தத் தயக்கமும் இன்றி அவர்களோடு கரம் கோர்த்து பணியாற்றுங்கள்.

நம் வசந்த காலங்கள் நிச்சயம் திரும்ப வரும். நம்பிக்கையுடன் போராடுவோம்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »