Press "Enter" to skip to content

3 மாதங்களில் 500 ஆக்சிஜன் ஆலைகள் – ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தகவல்

கொரோனா நோயாளிகளுக்காக டி.ஆர்.டி.ஓ. சார்பில் 3 மாதங்களில் 500 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படும் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி:

கொரோனா நோயாளிகளுக்காக டி.ஆர்.டி.ஓ. சார்பில் 3 மாதங்களில் 500 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படும் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நாடெங்கும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று தலைவிரித்தாடுகிறது.

கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அதன் தேவை அதிகரித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் மரணத்தை தழுவும் அவலத்தையும் காண நேர்ந்தது. இதையடுத்து பிரதமர் கொரோனா நிதியின்கீழ், அரசு ஆஸ்பத்திரிகளில் 551 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவ பிரதமர் மோடி கடந்த 25-ந்தேதியன்று அதிரடியாக முடிவு எடுத்தார்.

இந்த நிலையில் மத்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, பிரதமர் கொரோனா நிதியின்கீழ் 3 மாதங்களில் 500 மருத்துவ ஆக்சிஜன் ஆலைகளை நிறுவும் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்தார்.

மேலும் தேஜாஸ் இலகுரக போர் விமானத்தில் டி.ஆர்.டி.ஓ. அமைத்துள்ள மருத்துவ ஆக்சிஜன் ஆலை, ஆக்சிஜனுக்காக தவித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் எனவும் அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்தார். கொரோனா நோயாளிகளுக்கு மிகவும் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு எம்.ஏ.பி. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக டி.ஆர்.டி.ஒ. அமைப்புக்கு ராஜ்நாத் சிங் பாராட்டும் தெரிவித்தார்.

500 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவுவது தொடர்பாக டி.ஆர்.டி.ஓ. அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

பெங்களூருவை தளமாகக்கொண்ட டாட்டா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட், கோயம்புத்தூரில் உள்ள டிரைடன்ட் நியூமேட்டிக்ஸ் ஆகியவற்றுக்கு எம்.ஒ.பி. தொழில்நுட்பம் மாற்றப்பட்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் 380 ஆக்சிஜன் ஆலைகளை நிறுவும்.

(எம்.ஓ.பி. என்பது நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய தொழில் நுட்பம் ஆகும். இந்த தொழில் நுட்பத்தை டி.ஆர்.டி.ஓ.அமைப்புதான் வடிவமைத்துள்ளது.)

மேலும், நிமிடத்துக்கு தலா 500 லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய 120 ஆலைகளை உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் தொழில் நிறுவனங்கள் நிறுவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் கொரோனா நிதியின் கீழ், 1 லட்சம் எடுத்துசெல்லக்கூடிய (‘போர்ட்டபிள்’) ஆக்சிஜன் செறிவூட்டிகளை மத்திய அரசு வாங்குகிறது.

இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ 1 லட்சம் போர்ட்டபிள் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்படும். மேலும் 500 ஆக்சிஜன் ஆலைகள் பிரதமர் கொரோனா நிதியில் இருந்து அனுமதிக்கப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் காரணமாக மாவட்ட தலைநகரங்களிலும், இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆக்சிஜன் கிடைப்பது எளிதாகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »