Press "Enter" to skip to content

கர்நாடக அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 24 கொரோனா நோயாளிகள் பலி

சாம்ராஜ் நகரில் 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் 24 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் நோயாளிகள் இறந்ததாக அவர்களின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.

பெங்களூரு:

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தும் வருகிறார்கள்.

கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில், புதிய பிரச்சினையாக செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதன்காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் இறந்து வருகின்றனர். சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற உறவினர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்களை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் ஒரேநாளில் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

கர்நாடகத்தின் சாம்ராஜ்நகர் டவுனில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மட்டும் சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 18 கொரோனா நோயாளிகள் திடீரென இறந்தனர். நள்ளிரவுக்கு பிறகு அதிகாலை வரை மேலும் 6 நோயாளிகள் உயிரிழந்தனர். ஆக மொத்தம் ஒரே நாளில் 24 கொரோனா நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் கிடைக்காததால் தான் நோயாளிகள் இறந்ததாக அவர்களின் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு மாநில அரசே பொறுப்பு என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறியுள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரி சுரேஷ்குமார் ஆகியோர் சாம்ராஜ்நகர் சென்று மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »