Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பு பணிகள்- அதிகாரிகளுடன் இன்று மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம்? எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சென்னை:

தமிழ்நாட்டில் 2-வது அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 952 பேரை நோய் தொற்றி உள்ளது. 122 பேர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 23 ஆயிரத்து 258 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே சென்னை நகரம்தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு மட்டுமே நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் இறந்துள்ளனர்.

தொடர்ந்து பரவல் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு அமலில் உள்ளது.

இப்போது புதிதாக மேலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி காய்கறி, மளிகைக்கடைகள், டீக்கடைகள் போன்றவை பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய கட்டுப்பாடுகள் வருகிற 6-ந் தேதி (நாளை மறுநாள்) அமலுக்கு வருகிறது.

நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிறார். நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வந்ததுமே தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல் துறை டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

அப்போது மு.க.ஸ்டாலின் கொரோனா நிலைமைகள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் அடிப்படையில்தான் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு தகுந்த மாதிரி முன் ஏற்பாடாக படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் மற்ற தேவையான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள்.

ஆனாலும் நோய் பரவலின் வேகம் அதிகரித்து இருப்பதால் இது போதாது என்ற நிலை உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தொற்று மின்னல் வேகத்தில் பரவியதால் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகி ஆக்சிஜன் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டது. அது பலரை உயிரிழக்க செய்தது. அதுபோன்ற நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை உயர் அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, பனீந்திர ரெட்டி, காவல் துறை டி.ஜி.பி. திரிபாதி, சென்னை காவல் துறை கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர்.

அவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது நிலைமைகளை முழுமையாக கேட்டறிந்த அவர், அடுத்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யோசனைகளை வழங்கினார்.

மேலும் என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம்? எந்தமாதிரி நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, மருந்துகள், போதிய மருத்துவர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள் போன்ற வசதிகளை செய்வது பற்றியும் ஆலோசனை நடத்திய அவர், தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »