Press "Enter" to skip to content

சத்தீஸ்காரில் போதைக்காக ஓமியோபதி மருந்தை குடித்த 9 பேர் பலி

சத்தீஸ்காரில் கோர்மி கிராமத்தை சேர்ந்த சிலர் இரவு போதைக்காக சாராயத்துக்கு பதிலாக ‘துரோசெரா-30’ என்ற ஓமியோபதி சிறப்பை வாங்கிக் குடித்துள்ளனர்.

பிலாஸ்பூர்:

சத்தீஸ்காரில் சாராயத்துக்கு பதிலாக போதைக்காக ஓமியோபதி மருந்து குடித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சத்தீஸ்காரின் பிலாஸ்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கோர்மி கிராமத்தை சேர்ந்த சிலர் கடந்த 4-ந்தேதி இரவு போதைக்காக சாராயத்துக்கு பதிலாக ‘துரோசெரா-30’ என்ற ஓமியோபதி சிறப்பை வாங்கிக் குடித்துள்ளனர். 91 சதவீதம் ஆல்கஹால் அடங்கிய இந்த மருந்து போதையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த மருந்தை குடித்த அவர்களுக்கு உடனடியாக பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனால் அடுத்தடுத்து அவர்கள் சுருண்டு விழுந்தனர்.

இதில் 4 பேர் அன்றைய தினமே தங்கள் வீடுகளிலேயே பரிதாபமாக மரணமடைந்தனர். ஆனால் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவர்களது உறவினர்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் உடனடியாக இறுதிச்சடங்கை செய்துள்ளனர்.

ஆனால் இந்த மருந்தை குடித்த மேலும் 5 பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மறுநாள் காலையில் ஆஸ்பத்திரிகளில் உயிரிழந்தனர். இதன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது குறித்து தகவல் அறிந்து அந்த கிராமத்துக்கு சென்று காவல் துறையினர் விசாரித்த போது, மேலும் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சாராயத்துக்கு பதிலாக போதைக்காக இந்த மருந்தை அதிக அளவில் குடித்ததே மரணத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஓமியோபதி பயிற்சி மருத்துவர் ஒருவரிடம் இருந்து இந்த மருந்தை அவர்கள் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. ஓமியோபதி மருந்து குடித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சத்தீஸ்காரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »