Press "Enter" to skip to content

தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின் -ஓபிஎஸ், கமல் பங்கேற்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை:

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை திமுக தொடங்கியது. சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.

தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது. விழாவில் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல் பங்கேற்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »