Press "Enter" to skip to content

குஜராத், கர்நாடகா, மராட்டியத்தில் ‘டவ்தே’ புயலுக்கு 33 பேர் பலி

அரபிக்கடலில் உருவாகி குஜராத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்த ‘டவ்தே’ புயலால் மராட்டியத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

மும்பை:

அரபிக்கடலில் உருவாகி குஜராத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்த ‘டவ்தே’ புயலால் மராட்டியத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியது.

இதில் மும்பையில் 114 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மேலும் 24 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு ஏராளமான கட்டிட மேற்கூரைகள் பறந்தன. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. கடல் கொந்தளிப்பால் பல படகுகள் சேதம் அடைந்தன. சுற்றுலா தலமான கேட்வே ஆப் இந்தியா கடற்கரை பலத்த சேதம் அடைந்தது.

மேலும் புயலில் சிக்கி மும்பையில் 3 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தானே, பால்கரில் 5 பேர் பலியாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதன் மூலம் புயலுக்கு 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் மராட்டியத்தில் மின்கம்பங்கள் சாய்ந்தது மற்றும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது தொடர்பாக 46 லட்சத்து 41 ஆயிரம் வீடுகள், நிறுவனங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவற்றை சீர் செய்யும் பணியில் மின் வினியோக நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே தாண்டவமாடிய புயலால் கடல் கடும் சீற்றத்துடன் கொந்தளித்தது. நடுக்கடலில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மும்பையில் இருந்து தென்மேற்கில் சுமார் 70 கி.மீ. தொலைவில் நேற்று முன்தினம் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய் கிணறு கப்பலில் 273 பேர் வேலை செய்து கொண்டு இருந்தபோது, அந்த கப்பலின் நங்கூரம் தடுமாறியது. இதனால் கப்பலில் நீர் புக தொடங்கியது. அந்த ஊழியர்களை மீட்டு வருவதற்காக கடற்படையினர் விரைந்தனர்.

இதேபோல மும்பையில் இருந்து 48 நாட்டிக்கல் மைல் தூரத்தில் உள்ள ஜி.ஏ.எல். கன்ஸ்டரக்டர் கப்பலில் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்தது. அந்த கப்பலில் தவித்த 137 பேரை பத்திரமாக மீட்க ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பல் புறப்பட்டு சென்றது.

மேலும் தென்கிழக்கு மும்பையில் இருந்து 50 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள எண்ணெய் கிணறு கப்பலில் பலரும் சிக்கி தவித்தனர். மேலும் தத்தளித்த ராட்சத படகில் பலர் சிக்கி கொண்டனர்.

இவ்வாறு மேற்கண்ட 4 இடங்களில் நடுக்கடலில் 707 பேர் சிக்கி கொண்டது தெரியவந்தது. அவர்களை மீட்கும் பணியில் கடற்படையினர் இரவு பகலாக ஈடுபட்டனர். போர்க்கப்பல்கள், இழுவை கப்பல்கள், கடற்படை உலங்கூர்திகள் நேற்று 2-வது நாளாக மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டன. கடல் தொடர்ந்து கொந்தளிப்பாக இருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

ஆனாலும் 317 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டதாக நேற்று இரவு கடற்படை தெரிவித்தது. மீட்கப்பட்டவர்கள் பலருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலர் சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே மேலும் 390 பேர் நடுக்கடலில் தவித்து வருகின்றனர். அவர்களில் சிலர் மாயமாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

மேலும் மும்பையில் 2 ஆயிரம் மரங்கள் புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து விழுந்துள்ளன.

டவ்தே புயல் கரையை கடந்த குஜராத்தில் 13 பேரை உயிர் பலி வாங்கியுள்ளது. 160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் ஆமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் 16 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

மேலும் மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்ததோடு, ஆயிரம் மின்கம்பங்கள் சரிந்துள்ளன. மீட்புப்பணிகளில் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருவதாக மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே புயல் கரையை கடந்தபோது நடுக்கடலில் சிக்கிய 8 மீனவர்களை உலங்கூர்தி உதவியுடன் கப்பற்படையினர் மீட்டுள்ளனர். டவ்தே புயலால் மாநிலம் முழுவதும் பல இடங்களில் அடைமழை (கனமழை) பெய்ததாகவும், இதனால் பல நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கரையோரப்பகுதியில் வசித்து வந்த ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடகாவில், ‘டவ்தே’ புயலால் 8 பேர் உயிரிழந்தனர். மாநிலபேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, தட்சிண கன்னடம், உடுப்பி, உத்தரா கன்னடம், குடகு, சிக்கமகளூரு, ஹாசன் மற்றும் பெலகாவி ஆகிய ஏழு மாவட்டங்களில் 121 கிராமங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

புரட்டிப்போட்ட டவ்தே புயலுக்கு குஜராத், மும்பை மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 33 பேர் பலியாகி உள்ளனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »