Press "Enter" to skip to content

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்-மளிகை பொருட்கள் தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை:

முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி இருந்தார்.

அதில் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும்.

அதன்படி  மு.க.ஸ்டாலின்  முதல்-அமைச்சராக மே 7-ந்தேதி பதவி ஏற்றதும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த மாதம் ரே‌ஷன் கடைகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ரூ.2 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டது.

2-வது கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான இன்று (வியாழக்கிழமை) சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்துடன் கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இலவசமாக வழங்கப்படும் இந்த மளிகைப் பொருள் பையில் கோதுமை மாவு-1 கிலோ, உப்பு- 1 கிலோ, ரவை-1 கிலோ, சர்க்கரை- ½ கிலோ, உளுத்தம் பருப்பு – 500 கிராம், புளி-250 கிராம், கடலை பருப்பு-250 கிராம், கடுகு-100 கிராம், சீரகம்-100 கிராம், மஞ்சள் தூள்-100 கிராம், மிளகாய் தூள்-100 கிராம், டீ தூள்-2 (100 கிராம்) குளியல் சோப்பு-1 (125 கிராம், துணி சோப்பு-1 (250 கிராம்) ஆகியவை இருந்தது.

இந்த விழாவில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அதன்படி ஒருகால பூஜையுடன் இயங்கும் 12 ஆயிரத்து 959 கோவில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கான காசோலையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரிய சாமி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »