Press "Enter" to skip to content

தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி

தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இது பாரபட்சமானது என்று ‘ஜி-7’ சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் பதிவு செய்தது.

புதுடெல்லி:

தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இது பாரபட்சமானது என்று ‘ஜி-7’ சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் பதிவு செய்தது.

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரவலுக்கு மத்தியில் அதற்கு எதிராக தடுப்பூசிகளும் வந்து விட்டன. கொரோனா பரவல் அச்சத்தால் வீட்டுக்குள் நீண்ட காலம் முடங்கிக்கிடந்த பலரும் வெளிநாடுகளுக்கு செல்லத்துடிக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்ள ஏதுவாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதைப் பதிவு செய்து தடுப்பூசி கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. கொரோனாவை உலகுக்கு பரப்பிய சீனா, கணினி மயமான வடிவ தடுப்பூசி பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஜப்பானும் இத்தகைய பாஸ்போர்ட்டுகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்த தருணத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றைக்கொண்ட ஜி-7 அமைப்பின் சுகாதார மந்திரிகள் கூட்டத்தை நேற்று முன்தினம் இங்கிலாந்து நடத்தியது.

இதில் இந்தியா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் சார்பில் மத்திய சுகாதார மந்திரி மருத்துவர் ஹர்சவர்தன் காணொலிக்காட்சி வழியாக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் தருணத்தில், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் வளரும் நாடுகளில் இன்னும் மக்கள் தொகையில் குறைவான சதவீதத்தினருக்குத்தான் தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி பாஸ்போர்ட்டு வழங்குவது என்பது மிகவும் பாரபட்சமான ஒன்றாகும்.

கொரோனா தொற்றை வீழ்த்துவதற்கு தற்போதைய சூழலில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அவற்றின் சமமான வினியோகத்தை உறுதி செய்வது கட்டாயமான ஒன்று.

இந்தியா அனைத்து தடுப்பூசிகளையும் 60 சதவீத அளவுக்கு உற்பத்தி செய்கிறது. மிகுந்த நிபுணத்துவத்தைப் பெற்றிருக்கிறது. இதனால் உலகிற்கு வினியோகம் செய்ய பொருத்தமானது.

ஒருவரையும் பின்னால் விட்டு விடாமல், நிலையான வளர்ச்சி இலக்கு மந்திரத்தை வழங்குவதற்கு நாம் செயல்பட வேண்டும். ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி முன்னோக்கி நடை போட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தில் சீர்திருத்தங்களுக்கும், எதிர்காலத்தில் சிறந்த தயார் நிலையை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்துக்கும் இந்தியா ஆதரவு அளிக்கிறது.

தற்போதைய மற்றும் எதிர்கால பன்முக சுகாதார அச்சுறுத்தல்களை சமாளிக்க ஏற்ற விதத்தில் ஒரு சுகாதார நுண்ணறிவு ஆராய்ச்சி மையத்தை ஜி-7 அமைப்பு தொடங்குவதற்கும் இந்தியா தனது ஆதரவை வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »