Press "Enter" to skip to content

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதை 2025-ம் ஆண்டிலேயே எட்ட இலக்கு – பிரதமர் மோடி

உலக அளவில் அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

புதுடெல்லி:

புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக கார்பன் உமிழ்வை குறைக்கவும், எண்ணெய் இறக்குமதியில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கவும் பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 

கடந்த 2014-ம் ஆண்டில் 1 முதல் 1.5 சதவீதம் எத்தனால் கலப்பை செயல்படுத்தி வந்த இந்தியா தற்போது 8.5 சதவீதம் எத்தனால் கலந்து வருகிறது. இந்த இலக்கை அடுத்த ஆண்டுக்குள் 10 சதவீதமாகவும், 2030-ம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 2020-25-ம் ஆண்டுக்கான எத்தனால் கலப்புக்கான திட்ட அறிக்கையை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.

காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் இந்தியாவின் இலக்கு 2030-க்கு பதிலாக 2025 ஆக முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் நடவடிக்கையால் இந்தியாவில் 38 கோடி லிட்டராக இருந்த எத்தனால் கொள்முதல் தற்போது 320 கோடி லிட்டராக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் எத்தனால் கொள்முதலுக்காக எண்ணெய் நிறுவனங்கள் ரூ.21 ஆயிரம் கோடியை செலவழித்துள்ளன.

20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை எட்டும்போது, இந்த கொள்முதல் மற்றும் செலவினம் இன்னும் அதிகரிக்கும்.

எத்தனால் கலப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலில் சிறந்த தாக்கம் ஏற்படுவதுடன், விவசாயிகளுக்கு இது மற்றொரு வருமான வாய்ப்பையும் வழங்குகிறது. எத்தனால் கொள்முதல் 8 மடங்கு அதிகரித்திருப்பதன் மூலம் நாட்டின் கரும்பு விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.

காலநிலை நீதியின் வலுவான ஆதரவாளராக இந்தியா உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகித்துள்ளது. தொழிற்சாலைகளால்தான் காற்று மாசுபாடு ஏற்படுவதாகக் கூறுவது கட்டுக்கதை. வாகன போக்குவரத்து, மாசடைந்த எரிபொருள், டீசல் ஜெனரேட்டர்கள் போன்றவையும் காற்று மாசுபாட்டை உண்டாக்குகின்றன. அதேநேரம் சமையலுக்கு எரிவாயு, விளக்குக்கு மின்சாரம் போன்றவற்றால் விறகு, மண்ணெண்ணெய் போன்றவற்றால் ஏற்படும் மாசுபாடு குறைந்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் அறிவோம். அவற்றை கடக்க விரைவாக செயல்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »