Press "Enter" to skip to content

ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் அரிசி வழங்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன்அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் கூடுதல் ஒதுக்கீட்டுடன் ஜூன், ஜூலை மாதங்களில் அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 2.09 கோடி அரிசி ரேஷன்அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 18.64 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவுக்கு (ஏ.ஏ.ஒய்) மாதந்தோறும் அதிகபட்சம் 35 கிலோவும், 93 லட்சம் முன்னுரிமை ரேஷன்அட்டைதாரர்களுக்கு (பி.எச்.எச்.) நபர் ஒருவருக்கு தலா 5 கிலோவும், எஞ்சிய முன்னுரிமையற்ற ரேஷன்அட்டைதாரர்களுக்கு (என்.பி.எச்.எச்.) 20 கிலோ விலையில்லா அரிசியும் வழங்கப்படுகின்றன. ரேஷன்அட்டைதாரர்கள் தேவைக்கு ஏற்ப, புழுங்கல் அரிசி, பச்சரிசி என வாங்கி கொள்ளலாம்.

கொரோனா பரவலின் 2-ம் அலையால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன்அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் நபர் ஒருவருக்கு கூடுதலாக தலா 5 கிலோ தானியங்களை விலையில்லாமல் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி, ரேஷன்அட்டைதாரர்களையும் சேர்த்து கூடுதல் அரிசி வழங்கி வருகிறது.

உதாரணமாக ஈரலகு உள்ள குடும்பத்துக்கு 20 கிலோ, 3 அலகு உள்ள குடும்பத்துக்கு 30 கிலோ என்ற அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் சேர்த்து, இரு மடங்கு அரிசி கிடைக்கும். மே மாதம் வழங்க வேண்டிய இந்த கூடுதல் அரிசி வினியோகம் அடுத்த மாதம் (ஜூலை) சேர்த்து வழங்கப்படும்.

எனவே, மத்திய அரசின் கூடுதல் அரிசியும் சேர்த்து, அரிசி ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜூன் மாதத்தில் மொத்தமாக வினியோகிக்கப்படும் அரிசி விவரங்கள் ஞாயவிலைக்கடைகளில் உள்ள விளம்பரப்பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »