Press "Enter" to skip to content

கொரோனா, கருப்பு பூஞ்சை மருந்துகளுக்கு வரி குறைக்கப்படுமா? – ஜி.எஸ்.டி. கவுன்சில் நாளை முடிவு

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

புதுடெல்லி:-

உள்நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.விதிக்கப்படுகிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.

இதுபோன்ற மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், இதுதொடர்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால், இதுகுறித்து ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்காக மந்திரிகள் குழு ஒன்றை ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைத்தது. அந்த மந்திரிகள் குழு, கடந்த 7-ந் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இதையடுத்து, இப்பிரச்சினையில் முடிவு எடுப்பதற்காக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அதில், மந்திரிகள் குழுவின் அறிக்கை பரிசீலிக்கப்படும்.

மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டர், கிருமிநாசினிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், தனிநபர் கவச உடைகள், என்-95 ரக முக கவசங்கள், தடுப்பூசிகள், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி, கொரோனா பரிசோதனை உபகரணங்கள் மற்றும் கொரோனா, கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் ஆகியவற்றுக்கு வரி குறைப்போ அல்லது வரி விலக்கோ அளிப்பது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு எடுக்கிறது.

மந்திரிகள் குழுவில் இடம்பெற்ற மாநில நிதி மந்திரிகள் பலர், வரி குறைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அக்குழுவில் உள்ள உத்தரபிரதேச நிதி மந்திரி சுரேஷ்குமார் கன்னா வரி குறைப்பை ஆதரிப்பதாக கூறினார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »