Press "Enter" to skip to content

தேசத்துரோக சட்டம் பற்றிய சுப்ரீம் நீதிமன்றம் கருத்துக்கு ராகுல் காந்தி வரவேற்பு

தேசத்துரோக சட்டம் பற்றி சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், தேசத்துரோக சட்டம் இன்னமும் தேவையா? என்று சுப்ரீம் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி விடுத்தது.

தேசத்துரோக சட்டம் பற்றி சுப்ரீம் நீதிமன்றம் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி, கோகலே போன்ற தலைவர்களை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசால் அறிமுகம் செய்யப்பட்டது இந்த சட்டம். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த சட்டம் தேவையா? பேச்சு சுதந்திரத்தை முடக்குவதற்கான இந்த காலனி ஆட்சி கால சட்டம் தற்போது தேவையா. பல பழைய மற்றும் தேவையில்லாத சட்டங்களை, மத்திய அரசு நீக்கியுள்ளது. 

ஆனால் இந்த சட்டத்தை நீக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாங்கள் எந்த மாநிலத்தையும், அரசையும் குறை கூறவில்லை. அதே நேரத்தில் பல இடங்களில் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவு நீக்கப்பட்ட பிறகும் அது தவறாக பயன்படுத்துவது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்தோம். அதுபோலத் தான் இந்த சட்டமும்.

ஒரு மரத்தை துண்டாக்க ஒருவரிடம் கொடுக்கப்பட்ட ரம்பத்தால் ஒரு காட்டையே அழிப்பது போன்று தான் இந்த தேச துரோக சட்டம் உள்ளது. யாரையாவது பிடிக்காவிட்டால் அல்லது யார் புகார் கூறினாலும் எந்த கேள்வியும் இல்லாமல் இந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும். ஏதோ ஒரு சிறிய கிராமத்தில் உள்ள சாதாரண நபரை அவரைப் பிடிக்காவிட்டால் அங்குள்ள காவல் துறையினர் இந்த சட்டத்தில் வழக்கு தொடர முடியும். எங்கள் முக்கியமான அச்சம் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து தான். இந்த சட்டத்தை ஏன் நீக்கக் கூடாது என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துகளை வரவேற்கிறோம்’’ என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »