Press "Enter" to skip to content

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு – அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கோவில் நகைகளை பாதுகாக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை:

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கூட்டரங்கில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு வசதியாக எளிமையான போக்குவரத்து, பக்தர்கள் காத்திருப்பு அறை உள்ளிட்ட சகல வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கடந்த, 2-ந் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எச்.சி.எல். நிறுவனம், திருச்செந்தூர் கோவிலுக்கான அனைத்து தேவைகளையும் செய்து கொடுக்க முன்வந்துள்ளது.

செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. பணிக்கான இறுதி வடிவம் கொடுத்த பின், முதல்-அமைச்சர் அனுமதியுடன் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளுடன் இந்தப்பணி செய்து முடிக்கப்படும்.

கடந்த, 70 நாட்களில், ரூ.570 கோடி மதிப்பிலான, 110 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளோம். கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளில் நடந்த பணிகள், இந்த ஆட்சியில், 70 நாட்களிலேயே நடத்தி உள்ளோம். கொரோனா நோய் தொற்று தளர்வுகளின் அடிப்படையில் கோவில் திருவிழாக்களை உரிய விதிமுறை பாதுகாப்புடன் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களில் மாயமான சிலைகள் மீட்பதற்கு காவல்துறையின் எஸ்.பி. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் கலந்தாலோசனையும் நடத்தப்பட்டுள்ளது. காணாமல் போன சிலைகள், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மீட்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார்.

கோவில்களில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை, நன்கொடை பணத்தினை உடனடியாக அந்தந்த கோவிலுக்கான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தி வருகிறோம். பக்தர்கள் அளிக்கும், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பொருட்களை வகைப்படுத்தி கோவில் ஆவணங்களில் பதிவு செய்து, இணைக் கமிஷனர் முன்னிலையில் அந்தந்த கோவிலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக இதுதான் நிலை. தமிழக கோவில்களில் தேங்கியுள்ள நகைகள், அதன் பாதுகாப்பு தன்மை குறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

இதற்காக ஒரு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவில் காணிக்கை நகைகளில் அரக்கு, கற்கள், மணிகள் இருக்கும். அவற்றினை அகற்றி, விலை உயர்ந்த கற்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கப்பட உள்ளது. மீத முள்ள தூய நகைகள் எடை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதனை இணைக் கமிஷனர் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, மும்பையில் உள்ள மத்திய அரசின் நிறுவனத்திற்கு அனுப்பப்படும். அங்கு நகைகள், 24 காரட் தங்க பிஸ்கட்டுக்களாக மாற்றப்படும். அவை, சம்பந்தப்பட்ட கோவிலுக்கான தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், தங்க வைப்பு நிதியில் வைக்கப்படும். இவ்வாறு வைப்பு நிதியில் வைக்கும்போது, ஆண்டிற்கு, 2.5 சதவீதம் வட்டி அந்தந்த கோவிலுக்கு வருவாய் கிடைக்கும். இத்திட்டத்திற்கான வல்லுனர்குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்திட்டம் முழுக்க முழுக்க வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி.சந்திரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., வி.மார்க்கண்டேயன், எச்.சி.எல் நிறுவன கட்டிடக்கலை வல்லுனர் ஸ்ரீமதி உட்பட பல கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »