Press "Enter" to skip to content

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்கவேண்டும் – கமல்ஹாசன்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

சென்னை:

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம்.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது மிக குறைந்த தொகை. இல்லத்தரசிகளுக்கு எதுவுமே இல்லாத நிலையில் இந்த சிறிய தொகையாவது அவர்களுக்கு கிடைக்கிறதே என்றுதான் கருத வேண்டியுள்ளது. இது சிறு துவக்கம் என்கிற அளவில் மனதை தேற்றிக் கொள்ளலாம்.

ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. சமூகநலத் திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழும் தமிழ்நாடு குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »