Press "Enter" to skip to content

தமிழகத்தில் குட்கா, பான்பராக் விற்பனை இல்லாத நிலையை உருவாக்குவோம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் உள்ள எந்த கடைகளிலாவது தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதை வஸ்துகளை விற்றால் முதலில் அந்த கடைக்கு அறிவிப்பு அளிக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை:

சென்னையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடந்த புகையிலை தடுப்பு நடவடிக்கைகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் கட்டுப்பாட்டில் இருக்கிற உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன், காவல்துறை, தமிழக அரசு உள்ளாட்சி துறை ஆகிய 3 துறைகளின் கீழ் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் உள்ள எந்த கடைகளிலாவது தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதை வஸ்துகளை விற்றால் முதலில் அந்த கடைக்கு அறிவிப்பு அளிக்கப்படும்.  இரண்டாவது அபராதம் விதிக்கப்படும். அதற்கடுத்து அந்த கடை மூடி முத்திரை வைக்கப்படும்.

இந்த போதை வஸ்துகள் இளைஞர்களை அதிகம் பாதிக்கக்கூடியவையாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகளின் வாயில்கள், பொதுமக்கள் அதிகம் கூடுகிற மார்க்கெட் போன்ற பகுதிகளில் குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை மனித உருவ பொம்மை வடிவில் எந்தெந்த உறுப்புகளை பாதிக்கிறது.

எவ்வாறு உயிரிழப்பு ஏற்படுகிறது என்பதை வரைந்து பொம்மைகளாக உருவாக்கி மாவட்டத்திற்கு 50 இடங்களிலாவது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது.

அதோடு மட்டுமல்லாது மாவட்டத்தில் இரண்டு, மூன்று இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அந்த பகுதியில் இருக்கிற வணிகர்களை ஒன்றிணைத்து, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகிற இந்த மாதிரி போதை வஸ்துகளை விற்கமாட்டோம் என்ற உறுதிமொழி எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் 2 மாத காலத்தில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் எங்கேயும் இதுபோன்ற போதை வஸ்துகள் விற்கப்படவில்லை என்கிற நிலையை உருவாக்குவதற்கு இந்த 3 துறைகளும் ஒருங்கிணைந்து செயலாற்றுவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »