Press "Enter" to skip to content

மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா

கரையாம் புத்தூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கும், கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை பாகூர் கொம்யூனுக்குட்பட்ட சோரியாங்குப்பம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் பலர் பங்கேற்றனர்.

அதன் பின்னர் அந்த குடும்பத்தில் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதே கிராமத்தை சேர்ந்த பலர் காய்ச்சல், இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சோரியாங்குப்பம் கிராமத்துக்கு சென்று கொரோனா பரிசோதனை முகாம் நடத்தினர்.

அப்போது 24 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நோய் பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சோரியாங்குப்பம் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கரையாம் புத்தூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கும், கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இரு பள்ளிகளிலும் மற்ற மாணவர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “மாணவர்கள் பள்ளிக்கு வந்ததால் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. அவரவர் குடும்பத்தினர் மூலமே தொற்று ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு வரும் போது குழந்தைகளுக்கும் பரவும்.

அதுபோல் தற்போது ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் தொற்று பரவல் ஏற்படாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம்” என்றனர்.

இந்த நிலையில் குருவி நத்தம் கிராமத்திலும் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »