Press "Enter" to skip to content

எல்லை அருகே இறங்குதளம்… தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்ஐ-17வி5 உலங்கூர்தி ஆகியவற்றையும் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்தனர்.

பார்மர்:

அவசர காலங்களில் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் மற்றும் இதர விமானங்களை தரையிறக்கும் வகையில், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை-925ல் சத்தா-காந்தவ் இடையிலான 3 கிமீ பகுதியை அவசர காலங்களில் விமானங்களை தரையிறக்கும் பகுதியாக மாற்றி உள்ளது. 

பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள இந்த இறங்குதளத்தை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். அதன்பின்னர், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஆகியோரை விமானப்படை விமானத்தில் அமர வைத்து, விமானத்தை அவசரகால இறங்குதளத்தில் தரையிறக்கி ஒத்திகை பார்த்தனர்.

சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்ஐ-17வி5 உலங்கூர்தி ஆகியவற்றையும் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்தனர். இதன்மூலம், அந்த நெடுஞ்சாலையானது, துணை ராணுவ விமான தளமாக செயல்படுவதற்கு தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானப்படை விமானங்களை அவசரமாக தரையிறக்க பயன்படுத்தப்படும், முதல் தேசிய நெடுஞ்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பார்மரில் உள்ளதைப் போன்று மொத்தம் 20 அவசரகால தரையிறக்கும் வசதிகள் நாடு முழுவதும் உருவாக்கப்படுகின்றன என்றார். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் உதவியுடன் பல ஹெலிபேடுகளும் உருவாக்கப்படுவதாக கூறிய ராஜ்நாத் சிங், நமது பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த இது ஒரு முக்கியமான படியாகும் என்றார்.

‘சர்வதேச எல்லைக்கு அருகில் இதுபோன்ற அவசரகால இறங்கு தளங்களை உருவாக்குவதன் மூலம், நமது நாட்டின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க, என்ன விலை கொடுத்தாலும் துணிந்து நிற்போம் என்ற செய்தியை வழங்கியுள்ளோம். அவசரகாலத்தில் விமானங்களை தரையிறக்கும் வசதியை உருவாக்குவது மிகுந்த நம்பிக்கையை உருவாக்குகிறது. போர்க் காலங்களில் மட்டுமல்லாமல் இயற்கை பேரிடர் காலங்களிலும் இது உதவியாக இருக்கும்’  என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »