Press "Enter" to skip to content

திருவள்ளூர் அருகே விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற 2 சிறுவர்கள், பூண்டி ஏரி இணைப்பு கால்வாயில் தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சென்னை:

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை சிறுகடல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஷ்யாம் விக்னேஷ் (13).  அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் மகன் மோனிஷ் (12).  இருவரும் அங்குள்ள பள்ளியில் முறையே 8 மற்றும் 7ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மாலையில், இந்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக, சிறுவர்கள் இருவரும் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் அருகே சென்றனர்.

அங்கு, கால்வாயில் இறங்கி சிலையை கரைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கால்வாயில் விழுந்ததில், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.  அவர்கள், அலறல் சத்தம் கேட்டு

அப்பகுதி மக்கள் ஓடி வந்து சிறுவர்களை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.

உடனே இதுபற்றி தீயணைப்பு துறை மற்றும் செவ்வாப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரமாகியும் கிடைக்காததால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

அதற்கு பிறகு தேடியபோது, சிறுகடல் பகுதியில் மாணவர்களின் உடல்கள் மிதந்தன‌.  அவற்றை காவல் துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  இதுபற்றி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »