Press "Enter" to skip to content

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்- ஓராண்டுக்கு அமலில் இருக்கும்

ஆற்காடு சாலை துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து பவர்ஹவுஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள், வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

சென்னை:

சென்னை மெட்ரோ தொடர் வண்டி 2-ம் கட்டப்பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 80 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற இருப்பதால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றம் 14-ந்தேதி (நாளை) முதல் ஒரு ஆண்டுக்கு அமல்படுத்தப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை.

* கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர்-சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர்ஹவுஸ் சந்திப்பு வரை சென்று, இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் துறை நிலையம் வரைசென்று, வலது புறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை வழியாக, 100 அடி சாலை சந்திப்பு வரை சென்று, நேராகவும் ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடிசாலை வன்னியர் சாலை வழியாக போரூர்-சாலிகிராமம் செல்லலாம்.

* கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பு நோக்கி, ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர்ஹவுஸ் சந்திப்புவரை சென்று, இடது புறம் திரும்பி அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் துறை நிலையம் வரை சென்று, வலதுபுறம் திரும்பி 2-வது அவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்பு செல்லலாம்.

* வடபழனி சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக்கூடாது. மாறாக பவர்ஹவுஸ் சந்திப்பு, அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் துறை நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச்செல்லலாம்.

* அசோக் பில்லரிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச்செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் துறை நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.

* ஆற்காடு சாலை துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து பவர்ஹவுஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள், வழக்கம்போல் அனுமதிக்கப்படும். ஆனால், பவர்ஹவுஸ் சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலை துரைசாமி சாலை சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை (ஒரு வழி பாதை).

* வாகனங்கள், அம்பேத்கர் சாலை 2-வது அவென்யூ சாலை சந்திப்பிலிருந்து 2-வது அவென்யூ சாலை 100 அடிசாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், 2-வது அவென்யூ சாலை 100 அடிசாலை சந்திப்பிலிருந்து அம்பேத்கர் சாலை 2-வது அவென்யூ சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை (ஒருவழிபாதை).

* வாகனங்கள் அம்பேத்கர் சாலையில், பவர்ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகர் காவல் துறை நிலைய சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அசோக் நகர் காவல் துறை நிலையம் சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை. (ஒருவழிப் பாதை).

மேற்கண்ட தகவல் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »