Press "Enter" to skip to content

ஓணம் பம்பர் லாட்டரியில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.12 கோடி பரிசு

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துராவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயபாலனுக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி அனுமதிச்சீட்டு குலுக்கல் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்த லாட்டரியின் முதல் பரிசு தொகை ரூ.12 கோடி ஆகும். கேரள நிதிமந்திரி கே.என்.பாலகோபால் கலந்துகொண்டு அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்தார். அதில் டி.இ. 645465 என்ற எண்ணிற்கு முதல் பரிசு ரூ.12 கோடி விழுந்தது. அதேநேரம் அந்த முதல் பரிசை பெற்ற அதிர்ஷ்டசாலி யார்? என்று தெரியாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில், தற்போது அந்த அதிர்ஷ்டசாலி ஆட்டோ டிரைவர் என்பது தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துராவை சேர்ந்த ஜெயபாலனுக்கு இந்த பரிசு கிடைத்து உள்ளது. இவர் கடந்த 10-ந் தேதி இந்த லாட்டரி சீட்டை திருப்பணித்துராவில் உள்ள ஒரு கடையில் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. முதல் பரிசு பெற்ற ஜெயபாலனுக்கு ரூ.12 கோடியில் 10 சதவீதம் முகவர் கமிஷன் மற்றும் வரி நீங்கலாக ரூ.7.39 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ஏற்கனவே துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வரும் கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த செய்தலவி (48) என்பவருக்கு முதல் பரிசு விழுந்ததாகவும், தனது நண்பர் மூலமாக வாட்ஸ் ஆப் மூலம் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி கிடைத்ததாக படத்துடன் வெளியான தகவல் புரளி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »