Press "Enter" to skip to content

மதுரை மண்ணில் நிற்பது பெருமைக்குரியது- காந்தியின் பேத்தி தாரா காந்தி பெருமிதம்

மதுரை மக்கள் காந்தியின் மீதும், காந்தியத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்களாக இருப்பதன் வெளிப்பாடுதான், இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டம்.

மதுரை:

மகாத்மா காந்தி கடந்த 1921-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி மதுரையில் மேலாடையை துறந்து அரையாடைக்கு மாறினார். அதன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா நேற்று மதுரை வந்தார். அவர் காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென் இந்தியாவில், தமிழகம் எனது தாய் மண் ஆகும். இங்கு வருகை தந்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அத்துடன் எனது தாத்தா அரையாடைக்கு மாறிய மதுரை மண்ணில் கால்பதித்து நிற்பது பெருமைக்குரியது. நாட்டில் உள்ள விவசாயிகள் தான் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்குகின்றனர்.

அதன் அடையாளமாக மகாத்மா காந்தி தன்னை வெளிப்படுத்திக்கொண்ட தருணத்தை இந்த மண் ஏற்படுத்தி கொடுத்தது. ஒரு சாதாரண விவசாயி போல தன்னை மாற்றிக்கொண்டார். தன்னுடைய வாழ்வில் பலதரப்பட்ட விஷயங்களையும் சோதனையாக மேற்கொண்டு அதனை வாழ்வியலாக மாற்றினார். தேசப்பிதா ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாலும், துறவறம் பூண்டு இமயமலைக்கு செல்லவில்லை. மக்களோடு வாழ்ந்து ஆன்மிக அனுபவத்தை உணர்ந்தார்.

சில மனிதர்கள்தான் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்களில் காந்தியும், ராஜாஜியும் உள்ளனர் என கருதுகிறேன்.

“பல வண்ண உடைகளை அணிகிறீர்கள், ஆனால், உங்கள் தாத்தா அப்படி வாழவில்லை” என சிலர் கேட்கின்றனர்.

வெள்ளை நிறம் என்பது அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியது. எனவே அவர் தந்த வண்ணங்கள் இன்று நம்முடன் உள்ளன. மதுரை மக்கள் காந்தியின் மீதும், காந்தியத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்களாக இருப்பதன் வெளிப்பாடுதான், இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டம். அதில் பங்கேற்க இருப்பதை நினைக்கையில் பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, காந்தியின் கொள்ளுப்பேரன் விதுர் பரதன் காந்தி மற்றும் புதுடெல்லி, மதுரை காந்தி அருங்காட்சியக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »