Press "Enter" to skip to content

2 கார்களில் ரூ.1 கோடி கள்ளநோட்டுகள் சிக்கின- 10 பேர் கைது

கள்ளநோட்டுகளை அவர்கள் புழக்கத்தில் விட எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதுதொடர்பாக தனிப்படை காவல் துறையினர் கள்ளிக்குடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் 2 கார்கள் வந்தன. அவற்றை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர்.

இதில் கார்களின் உள்பகுதி மற்றும் இருக்கைகளுக்கு கீழ் வைத்திருந்த மொத்தம் 4 பைகளை எடுத்து திறந்து பார்த்த போது, அவற்றில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அந்த பணநோட்டு கட்டுகளை சோதனையிட்ட போது சில நோட்டுகள் அசல் பணம் என்பதும், மற்றவை கள்ளநோட்டுகள் என்றும் தெரியவந்ததால் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கார்களில் வந்தவர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது, அவர்களில் 2 பேர் ஏற்கனவே கள்ளிக்குடி காவல்துறையில் பதிவான மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

சிக்கிய 4 பைகளில் ஒரு பையில் ரூ.2 ஆயிரம் கட்டுகள், 2 பைகளில் ரூ.500 கட்டுகள், மற்றொரு பையில் ரூ.100 கட்டுகள் என கிட்டதட்ட ரூ.1 கோடி மதிப்பிலாக கள்ளநோட்டுகளை வைத்து எடுத்து வந்துள்ளனர். இதுதவிர கட்டுக்கட்டாக வெள்ளை நிற காகிதங்களும் இருந்தன.

மேலும் ஒரு காரில் காவல் துறை துணைஆய்வாளர் அணியும் சீருடையும் இருந்தது. அதனையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, கார்களில் வந்த கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த யோகராஜ் (வயது 38) , சென்னையை சேர்ந்த சுனில்குமார் (49), மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த அன்பு என்ற அன்பரசன் (31), கேரளாவை சேர்ந்த டோமி தாமஸ் (50), கோவையை சேர்ந்த அக்பர் (60), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த குமாயூன் (42), கள்ளிக்குடியை சேர்ந்த தண்டீசுவரன் (33), ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் (37), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (37), வேலூர் காட்பாடி பகுதியை சேர்ந்த பொன்ராஜ் (66) ஆகிய 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் வந்த 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளநோட்டுகளை அவர்கள் புழக்கத்தில் விட எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »