Press "Enter" to skip to content

பெகாசஸ் உளவு விவகாரம்- விசாரணைக் குழுவை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்

தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் மத்திய அரசு பெகாசஸைப் பயன்படுத்தியதா என்பது குறித்து பிரமாண பத்திரத்தில் கூற முடியாது என மத்திய அரசு தெரிவித்தது.

புதுடெல்லி:

பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது. 
பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க வல்லுநர் குழுவை அமைக்க தயார் என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதேசமயம், விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் மத்திய அரசு பெகாசஸைப் பயன்படுத்தியதா என்பது குறித்து பிரமாண பத்திரத்தில் கூற முடியாது எனவும், இந்த விவகாரம் குறித்து அரசுடன் தொடர்பற்ற வல்லுநர்களின் குழுவை அமைக்க அனுமதித்தால் அந்தக் குழுவின் முன்னர் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா என தெரிவிக்க தயார் எனவும் மத்திய அரசு கூறியது.
அதன்பின்னர் பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்தவர்களின் வாதங்களையும்  நீதிபதிகள் கேட்டறிந்தனர். இந்த விவகாரத்தில் விரைவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறினர்.

இந்நிலையில், பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஒரு வல்லுநர் குழுவை அமைக்க உள்ளதாக தலைமை நிதிபதி என்.வி.ரமணா இன்று கூறினார். மேலும், அடுத்த வாரம் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

மற்றொரு வழக்கு விசாரணையின்போது, பெகாசஸ் வழக்கு மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி இந்த தகவலை தெரிவித்தார்.

“இந்த வாரத்திலேயே உத்தரவு பிறப்பிக்க விரும்பினோம். ஆனால், குழுக்காக நாங்கள் பரிந்துரை செய்ய நினைத்த சில உறுப்பினர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மறுத்தனர். அதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்க உள்ளோம்” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »