Press "Enter" to skip to content

இலங்கையின் நீடித்த அமைதிக்கு தமிழர்களுடன் நல்லிணக்கம் அவசியம்: கோத்தபய ராஜபக்சே

தமிழர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை என்ற முடிவை எடுத்திருந்த கோத்தபய ராஜபக்சே, தற்போது அனைத்து பிரிவினருடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக இறங்கி வந்துள்ளார்.

நியூயார்க் :

ஐ.நா.வின் உயர்மட்ட பொதுச்சபை விவாதத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு பிரிவினைவாத பயங்கரவாத போர் காரணமாக கடந்த 2009-ம் ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகளாக இலங்கை பாதிக்கப்பட்டு வந்தது. 2019-ம் ஆண்டு ஈஸ்டர் தின தாக்குதல் மூலம் மத பயங்கரவாதிகளால் பேரழிவையும் இலங்கை சந்தித்தது.

உலகளாவிய சவாலான பயங்கரவாதத்தை எதிர்கொள்ள உளவுத்தகவல் பகிர்தல் உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பு தேவை.

இலங்கை நீடித்த அமைதியை எட்டுவதற்கு உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் தமிழர்களுடன் அதிக பொறுப்புணர்வு, மறுசீரமைப்பு நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை வளர்ப்பது அவசியம்.

இது பொருளாதார வளர்ச்சியின் பலன்களில் அதிக சமமான பங்களிப்பை உறுதி செய்கிறது. இனம், மதம், பாலினம் போன்றவற்றை பொருட்படுத்தாமல் இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கும் வளமான, நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது எங்கள் அரசின் உறுதியான நோக்கமாகும்.

இதற்காக உள்நாட்டில் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவும், சர்வதேச பங்காளிகள் மற்றும் ஐ.நா. சபையின் ஆதரவை பெறவும் தயாராக இருக்கிறோம்.

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் வன்முறை, எமது நாட்டின் ஆயிரக்கணக்கான உயிர்களையும், பல பத்தாண்டுகளின் செழிப்பையும் கொள்ளையடித்தது. இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதற்காக எமது அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது.

எனவே அதன் பின்னணியில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு கோத்தபய ராஜபக்சே கூறினார்.

தமிழர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை என்ற முடிவை எடுத்திருந்த கோத்தபய ராஜபக்சே, தற்போது அனைத்து பிரிவினருடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக இறங்கி வந்துள்ளார்.

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது ராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக 1.20 லட்சம் ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »