Press "Enter" to skip to content

ஜெர்மனி பாராளுமன்ற தேர்தல் – பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கட்சி தோல்வி

ஆட்சி அமைக்க தங்களுக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளதாக ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஒலாப் ஷோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

பெர்லின்:

ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியான ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வந்தார்.

இதற்கிடையே, அங்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் ஏஞ்சல் மெர்கல் போட்டியிடவில்லை. அவருக்கு பதில் ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் சார்பில் ஆர்மின் லஷெட் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மத்திய இடதுசாரி கட்சியான ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் ஒலாப் ஷோல்ட்ஸ் போட்டியிட்டார்.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு நேற்று காலை முடிவுகள் வெளியாக தொடங்கின.

இதில் ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சி நாட்டில் 16 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியை சிறிய வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி, ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சி 29.5 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 24.1 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், இரு கட்சிகளுமே ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மையை பெறவில்லை என கூறப்படுகிறது. எனினும் ஆட்சி அமைக்க தங்களுக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளதாக ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஒலாப் ஷோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »