Press "Enter" to skip to content

நாடு முழுவதும் 12 கோடி அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துணவு- மத்திய அரசு ஒப்புதல்

நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளுக்கு சூடான ஊட்டச்சத்துணவு வழங்கும் திட்டத்தினால் 11 லட்சத்து 20 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் படிக்கிற 11 கோடியே 80 லட்சம் குழந்தைகள் பலன் அடைவார்கள்.

புதுடெல்லி:

நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிக்கூடங்களிலும் மற்றும் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடங்களிலும் படிக்கிற குழந்தைகளுக்கு மதியம் சூடான ஊட்டச்சத்துணவு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிரதம மந்திரி போஷன் திட்டத்தின்கீழ், பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய மதிய உணவு வழங்குவதற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 794 கோடியே 90 லட்சம் செலவிட ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையொட்டி மத்திய தகவல், ஒலிபரப்பு மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டம், 2021-22 தொடங்கி 2025-26 வரையில் 5 ஆண்டு காலத்துக்கு பள்ளிகளில் பிரதம மந்திரி போஷன் தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் மத்திய அரசு ரூ.54 ஆயிரத்து 61 கோடியே 73 லட்சம் வழங்கும். மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் ரூ.31 ஆயிரத்து 733 கோடியே 17 லட்சம் வழங்கும்.

உணவு தானியங்களுக்காக மத்திய அரசு கூடுதலாக ரூ.45 ஆயிரம் கோடியை ஏற்கும்.

எனவே இந்த திட்டத்துக்கான மொத்த வரவு செலவுத் திட்டம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 794 கோடியே 90 லட்சம் ஆகும்.

இந்த திட்டம், அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கிற அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிக் கூடங்களில் நிறைவேற்றப்படும்.

இந்த திட்டத்தினால் 11 லட்சத்து 20 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் படிக்கிற 11 கோடியே 80 லட்சம் குழந்தைகள் பலன் அடைவார்கள்.

தற்போது (மாநிலங்களில்) நடைமுறைப்படுத்தப்படுகிற மதிய உணவு திட்டம், பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மாண் திட்டத்துடன் புதிய அம்சங்களுடன் சேர்க்கப்பட்டு விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இ.சி.ஜி.சி. என்னும் ஏற்றுமதி கடனுறுதி கழகத்துக்கு ரூ.4,400 கோடி நிதி வழங்கவும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் சிறிய ஏற்றுமதியாளர்கள் மகத்தான பலன்களை அடைவார்கள் என்று மத்திய வர்த்தக, தொழில் மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மேலும் அமைப்பு ரீதியிலான தொழில் துறையில் 2.6 லட்சம் உள்பட மொத்தம் 59 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »