Press "Enter" to skip to content

வீட்டின் முன்பு 30 அடிக்கு திடீரென உருவான பெரிய பள்ளம்

பெங்களூருவில் வீட்டின் முன்பு 30 அடிக்கு திடீரென பெரிய பள்ளம் உருவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெட்ரோ தொடர் வண்டி சுரங்க பாதை பணியால் இந்த விபரீதம் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு டேனரி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் ஜபி என்பவர் வசித்து வருகிறார். இந்த வீடு முபீன் என்பவருக்கு சொந்தமானதாகும். அந்த வீட்டை அவர் வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு பகுதியில் வசிக்கிறார். இந்த நிலையில், ஜபி வீட்டின் முன்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவர் பீதி அடைந்தார். பின்னர் நேற்று அதிகாலையில் மேலும் பல அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.

இதுபற்றி தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஜபி வீட்டின் முன்பு 30 அடிக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கொட்டிகெரேயில் இருந்து நாகசந்திரா வரை மெட்ரோ தொடர் வண்டி பாதைக்காக சுரங்க பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணி பல மாதங்களாக நடைபெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நிறைவு பெற்றிருந்தது. சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்த ராட்சத எந்திரமும் வெளியே வந்திருந்தது. இந்த சுரங்க பாதை அமைக்கப்பட்டதால், டேனரி ரோடு, அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் உள்ள கிணறு, ஆள்துளை கிணறு ஆகியவற்றை மூடும்படி மெட்ரோ தொடர் வண்டி நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, ஜபி வீட்டில் இருந்த கிணற்றையும் மெட்ரோ அதிகாரிகள் மூடி இருந்தார்கள். தற்போது அந்த கிணறு அமைந்திருந்த இடத்தில்தான் 30 அடிக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. மெட்ரோ தொடர் வண்டி பணிகள் நடந்ததால் வீட்டில் அடிக்கடி அதிர்வு ஏற்பட்டு வந்ததாகவும் ஜபி மற்றும் முபீன் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். குறிப்பாக மெட்ரோ தொடர் வண்டி சுரங்க பாதையால் தான் தன்னுடைய வீட்டின் முன்பு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருப்பதாக முபீன் குற்றச்சாட்டு கூறி இருக்கிறார்.

மேலும் வீட்டின் முன்பு பள்ளம் ஏற்பட்டு இருப்பதால், எந்த நேரமும் வீடு இடிந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது, எனவே தனது வீட்டை மெட்ரோ தொடர் வண்டி நிர்வாகம் எடுத்து கொண்டு, அதற்கு உரிய நிவாரணம் வழங்கும்படி முபீன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதால், அங்கு வசித்து வந்த ஜபி, அவரது குடும்பத்தினர் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், அந்த வீட்டை மெட்ரோ தொடர் வண்டி நிர்வாக அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி உள்ளதாகவும், கான்கிரீட் போட்டு கொடுத்து அந்த பகுதி மூடப்படும் என்றும், முழுமையாக சேதம் அடைந்திருந்தால், உரிமையாளருக்கு வீடு கட்டி கொடுக்க தேவையான நடவடிக்கையை மெட்ரோ தொடர் வண்டி நிர்வாகம் எடுக்கும் என்றும் நிர்வாக இயக்குனர் அஞ்சும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »