Press "Enter" to skip to content

கிருஷ்ணர் ஓவியம் வரையும் முஸ்லிம் பெண்

தான் வரையும் கிருஷ்ணர் ஓவியங்களை கோவிலுக்குள் சென்று வழங்க வேண்டும் என்பது ஜஸ்னா சலிமின் நீண்டநாள் ஆசையாக இருந்தது. தற்போது அவரது கனவு நிறைவேறியுள்ளது.

கோழிக்கோடு:

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்துக்கு உட்பட்ட கோயிலாண்டி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்னா சலிம் (வயது 28). முஸ்லிம் மதத்தை சேர்ந்த குடும்பத்தலைவியான இவர் சிறந்த ஓவியர் ஆவார். அதிலும், கிருஷ்ண பிரானின் ஓவியங்களை மிகவும் தத்ரூபமாக வரைவதில் கைதேர்ந்தவராக உள்ளார்.

இவரது இந்த ஓவியங்களை கேரளாவில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமானோர் வாங்கி வருகின்றனர். அத்துடன் இந்த ஓவியங்களை ஒவ்வொரு ஆண்டும் குருவாயூரில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கும் அவர் வழங்கி வருகிறார்.

எனினும் அந்த ஓவியங்களை அவரால் கோவிலுக்குள் சென்று வழங்க முடியாது. இந்து அல்லாத பிற மதத்தினரை கோவிலுக்குள் அனுமதிக்காததால், ஜஸ்னாவாலும் உள்ளே செல்லமுடியாது. எனவே கோவிலின் உண்டியலுக்கு அருகே வைத்து செல்வார் அல்லது கோவில் நிர்வாகிகளிடம் வழங்கி விடுவார்.

ஆனால் தான் வரையும் கிருஷ்ணபிரான் ஓவியங்களை கோவிலுக்குள் சென்று வழங்க வேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசையாக இருந்தது. அவரது இந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டத்தின் பந்தளத்தில் உள்ள உலநாடு கிருஷ்ணசுவாமி கோவிலுக்கு கிருஷ்ணபிரான் ஓவியம் ஒன்றை கோவில் நிர்வாகத்தின் வேண்டுகோளின்பேரில் ஜஸ்னா கோவிலுக்கே சென்று வழங்கி உள்ளார். இது ஜஸ்னாவுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், ‘இதன் மூலம் உண்மையிலேயே ஒரு கனவு எனக்கு நிறைவேறியுள்ளது. எனது வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு கோவிலின் உள்ளே சென்றேன்.’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »