Press "Enter" to skip to content

வன்முறை நடந்த லக்கிம்பூர் கேரி கிராமத்துக்கு சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்

உ.பி.யின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் மேலும் வன்முறை பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லக்னோ:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அண்டை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.க.வினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் தேர் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பா.ஜ.க.வினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வன்முறை நடைபெற்ற பன்வீர்பூருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி இன்று நேரில் செல்வதாக இருந்தது. இதற்காக, அவர் லக்னோவில் இருந்து இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்றார். 

ஆனால், பிரியங்கா காந்தியை பன்வீர்பூர் கிராமத்திற்குள் நுழைய காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. அவரை கிராம எல்லையிலேயே தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »