Press "Enter" to skip to content

நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது: வீடுகளில் கொலு வைத்து கொண்டாட்டம்

இனி வரும் 9 நாட்கள், அதனைத்தொடர்ந்து விஜயதசமி வழிபாடு என அடுத்த 10 நாட்களும் வீடுகளில் விரதம், கொலு வழிபாடு என்று பக்தி பெருக்கெடுத்து ஓட இருக்கிறது.

சென்னை :

இந்து பாரம்பரியத்தின் பண்டிகைகளில், நவராத்திரி திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிஷாசுரனுடன் 9 நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமியன்று வெற்றி பெற்றார். இந்த ஐதீகத்தின்படி, புரட்டாசி மாதம் 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.

இந்த நாட்களில் வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களையும் சுத்தம் செய்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்துவார்கள்.

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக, 9 நாட்களிலும் கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும்.

தினமும் காலையும், மாலையும் இந்த கொலுவின் முன்பு கோலமிட்டு, விளக்கேற்றி, மலர்கள், படையலிட்டு வழிபாடு நடைபெறும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடையில் உள்ள 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொள்வோருக்கு விரும்பியது ஈடேறும் என்பதும், முப்பெரும் செல்வங்களான கல்வி, செல்வம், வீரத்தை அடைவார்கள் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

நவராத்திரி திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இனி வரும் 9 நாட்கள், அதனைத்தொடர்ந்து விஜயதசமி வழிபாடு என அடுத்த 10 நாட்களும் வீடுகளில் விரதம், கொலு வழிபாடு என்று பக்தி பெருக்கெடுத்து ஓட இருக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »