Press "Enter" to skip to content

இந்திரா காந்தியிடம் இருந்த நெருப்பு பிரியங்காவிடமும் உள்ளது- சிவசேனா

பிரியங்கா காந்தி ஒரு நெருப்பை போன்ற தலைவர் மற்றும் போராளி. அவரது கண்களிலும், குரலிலும் இந்திரா காந்தியின் அதே நெருப்பு உள்ளது என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை:

உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கெரியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பா.ஜனதாவினர் தேரை கொண்டு மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நடந்த வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் பலியானார்கள். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

இதேபோல் லகீம்பூர் கெரிக்கு சென்ற சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி போன்றவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் மகாராஷ்டிரத்தில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியை பகிர்ந்துள்ள சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிரியங்கா காந்தியின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் என்பதால் அவர் மீது அரசியல் தாக்குதல் நடத்தப்படலாம். ஆனால் அவர் இந்திரா காந்தியின் பேத்தி. இந்திராகாந்தி நாட்டிற்காக பெரும் தியாகம் செய்தவர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசத்தை பிரித்தார். அவரை சட்டவிரோதமாக சிறையில் அடைத்தவர்கள் இந்த உண்மையை உணர்ந்திருக்க வேண்டும்.

பிரியங்கா காந்தி தான் செய்த குற்றம் என்ன? வாரண்ட் கொடுக்கப்பட்டதா அல்லது சிறை தண்டனைக்காக என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். உத்தரபிரதேச நிர்வாகம் அவரை தடுத்தது மட்டுமல்லாமல், அவரை தாக்கியது.

பிரியங்கா காந்தி ஒரு நெருப்பை போன்ற தலைவர் மற்றும் போராளி. அவரது கண்களிலும், குரலிலும் இந்திரா காந்தியின் அதே நெருப்பு உள்ளது.

பிரியங்கா காந்தி அவமதிக்கப்படுகிறார். மகாராஷ்டிரத்தில் உள்ள ஒரு பா.ஜனதா பெண் உறுப்பினருக்கு இது நடந்திருந்தால் அக்கட்சி தனது பெண் தொண்டர்களை போராட்டத்திற்கு கட்டவிழ்த்து விட்டு இருக்கும். பெண்கள் பாதுகாப்பு குறித்து பா.ஜனதா ஒரு சொந்த வரையரை வைத்துள்ளது. இந்திரா காந்தியின் பேத்தி மீதான தாக்குதல் அந்த எல்லைக்குள் வராது. ஆனால் இன்று லகீம்பூர் கெரியில் உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீது கார்களை ஏற்றி கொன்றவர் ஒரு மத்திய மந்திரியின் மகன் ஆவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் டெல்லி சென்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் கூறுகையில், “நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம். நான் ராகுல் காந்தியை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதித்தேன். ஆனால் நாங்கள் என்ன விவாதித்தோம் என்பதை இப்போது கூற முடியாது. லகீம்பூர் சம்பவம் குறித்து நான் அவருடன் கலந்துரையாடியுள்ளேன்” என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »