Press "Enter" to skip to content

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சி:

உலக பெண் குழந்தைகள் தினவிழா திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது ஒரு மாணவி, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆல் பாஸ் என்று போடப்பட்டுள்ளது. இதனால் எங்களின் உயர்கல்வி படிப்பிற்கு பாதிப்பு வருமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் பதில் அளித்து பேசுகையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்று உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு வைக்காமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் வராது என்றார்.

இதையடுத்து இன்னொரு மாணவி நடப்பு ஆண்டில் தேர்வுகள் நடத்தப்படுமா? என கேட்டார். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக பள்ளிக்கல்வித்துறை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு டிசம்பரில் அரையாண்டு தேர்வினையும், அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வினையும் நடத்த முடிவு செய்துள்ளது. முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று அதற்கான சுற்றறிக்கைகள் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்றார்.

விழாவில் பேசும்போது, எனக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனால் பெண் குழந்தைகள் இல்லையே என்ற வருத்தம் இருந்தது. நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது மாநிலத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் நமக்கு மகள்களாக வந்து விட்டனர் என்று மனைவியிடம் கூறினேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். படிப்பதற்கு வறுமை தடையாக இருக்காது. நீங்கள் நன்றாக படித்தால் உயர்கல்வியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார் என்றார்.

விழாவில் பி‌ஷப் ஹீபர் கல்லூரி சைல்டு லைன் அமைப்பின் பொறுப்பாளர் காட்வின் பிரேம்சிங், சேவா சங்க நிர்வாக குழுவின் செயலாளர் சரஸ்வதி, பள்ளி தலைமை ஆசிரியை நாகம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »