Press "Enter" to skip to content

தமிழகத்தில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது

தமிழகத்தில் 30 ஆயிரம் இடங்களில் நடைபெறும் இந்த முகாமுக்காக அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் 12-ந்தேதி தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 20 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில் இலக்கான 20 லட்சத்தை கடந்து 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதைத்தொடர்ந்து 19-ந்தேதியும், 26-ந்தேதியும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு இந்த முகாம்கள் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால், கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறைந்தது. இதையடுத்து தமிழக அரசின் அழுத்தத்தால் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் தடுப்பூசி பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி 4-வது மெகா தடுப்பூசி முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 30 ஆயிரம் இடங்களில் நடைபெறும் இந்த முகாமுக்காக அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த முகாம் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி போட சுகாதாரத்துறை அதிகாரிகள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர். மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 70 சதவீதத்தினருக்கு முதல் தவணை தடுப்பூசி போடவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் (கிழக்கு) 3-வது அவென்யூவில் உள்ள மஸ்ஜித் ஜாவித் பள்ளிவாசலில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்த பள்ளிவாசல் நிர்வாக குழு தடுப்பூசி முகாமை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 1,800 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பூசி முகாம்கள் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பூங்கா உள்ளிட்டவைகளில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  இன்று இரவு 8 மணி வரை தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும்.  பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »