Press "Enter" to skip to content

சுற்றுச்சூழல் ஆஸ்கார் இறுதி போட்டியில் தமிழக மாணவி பங்கேற்பு

சோலார் மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கியதன் மூலம் வினிஷா உமாசங்கர் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏராளமான விருதுகளும், பரிசுகளும் பெற்றுள்ளார்.

லண்டன்:

பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், அதற்கான சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குவோருக்கு ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உருவாக்கிய இந்த பரிசு, சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கு தலா 1 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.10 கோடி) பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டிக்கு 15 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து இருவர் இடம்பிடித்து உள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த வினிஷா உமாசங்கர் (வயது 14) என்ற மாணவி முக்கியமானவர் ஆவார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியான இவர், சோலார் மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கி உள்ளார். சுமார் 40 ஆயிரம் செலவில் உருவாக்கி உள்ள இந்த வண்டியால், கரியின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

இந்த வண்டியை உருவாக்கியதன் மூலம் வினிஷா உமாசங்கர் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏராளமான விருதுகளும், பரிசுகளும் பெற்றுள்ளார்.

இறுதி போட்டி லண்டனின் அலெக்சாண்டிரா மாளிகையில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் படைப்பாளிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »