Press "Enter" to skip to content

இந்தியா- சீனாவின் 13-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: எல்லையில் படைகளை திரும்பப்பெற பெற சீனா மறுப்பு

இந்தியா தரப்பில் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை எடுத்துரைத்த நிலையில், படைகள் திரும்பப்பெற உள்ளிட்ட விசயங்களை சீனா ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் அத்து மீறியதால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட சண்டையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தன. இதனால் பதட்டம் ஏற்பட்டது. இந்த பதட்டத்தை தணிக்க இரு நாட்டு ராணுவத்தினர் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. கடைசியாக நடந்த 12-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு கோக்ரா பகுதியில் இருந்து இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை விலக்கி கொண்டது.

இந்தநிலையில் இந்தியா- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான 13-வது கட்ட பேச்சுவார்த்தை மால்டோ எல்லையில் நடந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பிரச்சினை குறித்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் முக்கியமாக விவாதித்தனர். எல்லைக்கோட்டை மாற்ற முயற்சிப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது.

சீனா அதிகப்படியான படைகளை குவித்ததால்தான் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் எல்லையில் சீனா புதிய விமான தளம் அமைப்பதற்கும் இந்தியா தனது ஆட்சேபத்தை தெரிவித்தது.

எல்லையில் படைகளை விலக்கி கொள்ள சீனா மறுப்பு தெரிவித்தது. பல பகுதிகளில் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா தரப்பு ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை வழங்கியது. ஆனால் சீனா தரப்பு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

தகவல் தொடர்புகளை பராமரிக்க இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டனர். படைகளை விலக்கி கொள்வது உள்பட பல விசயங்களில் சீனா உடன்பாட்டுக்கு வராததால் இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »