Press "Enter" to skip to content

எல்லை பாதுகாப்புப்படையின் அதிகார எல்லை நீட்டிப்பு கூட்டாட்சி மீதான தாக்குதல்: பஞ்சாப் முதல்வர் கண்டனம்

மத்திய அரசு எல்லை பாதுகாப்புப்படையின் அதிகார எல்லையை நீட்டித்துள்ளதற்கு பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா அண்டை நாட்டுடன் உள்ள எல்லைகளில் பாதுகாப்புப்படையினரை நிறுத்தியுள்ளது. பஞ்சாப், மேற்கு வங்காளம், அசாம் மாநில எல்லைகளில் 15 கி.மீட்டர் வரை எல்லை பாதுகாப்புப்படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 15 கி.மீட்டர் எலைக்குள் கைது, சோதனை, பறிமுதல் போன்ற நடவடிக்கைகளில் எல்லைப் பாதுகாப்புப்படையினர் ஈடுபட அனுமதி உண்டு.

தற்போது 15 கி.மீட்டர் என்பதை 50 கி.மீட்டர் என மத்திய உள்துறை அமைச்சகம் விரிவாக்கம் செய்துள்ளது. இதன்மூலம் எல்லைப் பாதுகாப்புப்படையினரின் அதிகாரம் மூன்று மாநிலங்களில் அதிகமாகிறது. இதற்கு பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவு கூட்டாட்சி மீதான தாக்குதல். இதை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சரண்ஜித் சிங் சன்னி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மத்திய அரசின் ஒருதலை பட்சமான இந்த முடிவுக்கு நான் கடுமையான வகையில் கண்டனம் தெரிவிக்கிறேன். இது நேரடியாக கூட்டாட்சி மீதான தாக்குதல். இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வலியுறுத்துகிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பொற்கோவில் எல்லையில் இருந்து 35 கி.மீட்டர் தொலைவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »